வீசானம் ஏரியில் பனை விதைகள் நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் பணி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீசானம் ஏரியில் பனை விதைகள் நட்டு வைத்தார்.;

Update: 2025-10-15 16:05 GMT
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீசானம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் , மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தின் கீழ் பனை விதைகளை நட்டு வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டிற்கான பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம், மாவட்ட நிருவாகங்கள் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்களுடன் இணைந்து, 2024 பனை விதை நடும் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை இலக்காக கொண்டு தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், நீர்நிலைகள், தரிசு நிலங்கள் மற்றும் பனை காடுகளை உருவாக்குவதற்கு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 4.11 இலட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீசானம் ஏரியில் பனை விதைகளை நட்டு வைத்தார். இதில் பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுமார் 5,000 பனை விதைகளை நடவு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கொசவம்பட்டியில் ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதையும், பொன்நகர் பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் புதை வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மோகனூர் சாலையில் உள்ள இளங்கலை கல்லூரி மாணவியர் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த உணவினை பார்வையிட்டார். மேலும், விடுதியில் தங்கியுள்ள மாணவியர்களின் எண்ணிக்கை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவு பொருட்கள் இருப்பு ஆகியவை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து, விடுதியினை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ரெட்கிராஸ் செயலர் திரு சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News