நாமக்கல்லில் சுமங்கலி பெண்கள் கேதார கௌரி விரதம் அனுசரிப்பு!
நாமக்கல்- கோட்டை சாலையில் உள்ள பஜனை மடத்தில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது.;
நாமக்கல்லில் ஏராளமான பெண்கள், கேதார கவுரி விரதம் மேற்கொண்டனர். சிவனை பிரிந்திருந்த அம்பாள், புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி தொடங்கி, ஐப்பசி அமாவாசை வரை, 21 நாட்கள் கேதார கவுரி விரதமிருந்து, பிரியாமல் இருக்கும் வரம் வாங்கியதாக ஐதீகம். இந்த விரதத்தை குடும்ப பெண்கள், கடைபிடிப்பதால், கணவனை பிரியாமல் இருப்பதுடன், நிறைசெல்வம், நீண்ட ஆயுள் உள்ளிட்டவை வரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.இதில், 21 நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்காதவர்கள் கூட, விரதத்தின் முக்கிய தினமான, ஐப்பசி அமாவாசையில், விரதம் இருந்து வழிபாடு நடத்துகின்றனர்.நாமக்கல்- கோட்டை சாலையில் உள்ள பஜனை மடத்தில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் -21) விஸ்வகர்மா, சௌராஷ்டிரா, நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தை சார்ந்த சுமங்கலி பெண்கள் கௌரி கயிறு எனப்படும். கயிறை புதிய முறத்தில் வைத்து அம்மனுக்கு படையல் வைத்து பின்னர் சுமங்கலி பெண்கள் கையில் கட்டி கொண்டு விரதம் எடுப்பார்கள். இந்த விரதத்தின் நோக்கமே குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.திருமணமான பெண்கள், சுவாமியை பிரதிஷ்டை செய்து, 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம் மற்றும் நோன்பு கயிறு ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் வைத்து வழிபட்ட நோன்பு கயிறை கட்டிக்கொண்டனர்.