விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-10-31 12:02 GMT
மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (28.10.2025) 661 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழையளவு 557.28 மி.மீ. இயல்பு மழையளவை விட அக்டோபர் மாத கூடுதலாக 103.72 மி.மீ அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் செப்டம்பர் 2025 மாதம் வரை நெல் 2190 எக்டர், சிறுதானியங்கள் 52614 எக்டர் பயறு வகைகள் 6858 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 27988 எக்டர், பருத்தி 1453 எக்டர் மற்றும் கரும்பு 8213 எக்டர் என மொத்தம் 99315 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 447 எக்டர், கத்திரி 302 எக்டர், வெண்டை 198 எக்டர், மிளகாய் 92 எக்டர், மரவள்ளி 998 எக்டர், வெங்காயம் 1891 எக்டர், மஞ்சள் 2238 எக்டர் மற்றும் வாழை 2265 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு இரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்க்கா / வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், சோளம், மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு, பருத்தி, மரவள்ளி, சிறிய வெங்காயம், வாழை, தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார்.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விவசாய பெருமக்கள் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், நீர்வளத் துறை செயற்பொறியாளர் கொ.அப்புசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன், துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News