எக்ஸெல் கல்லூரி நிறுவனத்திற்கு முக்கிய அறிவிப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவியருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.;

Update: 2025-11-01 13:05 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா, பள்ளக்காபாளையம் பகுதியில் அமைந்துள்ள எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் உணவு தரமற்ற நிலையில் இருந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 27.10.2025 அன்று நண்பகல் 12 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.தங்கவிக்னேஷ் தலைமையில் ஏழு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு இரண்டு நாட்கள் (27.10.2025 (ம) 28.10.2025) ஆய்வு மேற்கொண்டனர். அதில் கல்லூரியின் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது கண்டறியப்பட்டது தொடர்ந்து, மாணவ மாணவியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொது சுகாதார துறையின் சார்பாக மருத்துவக் குழுவினர் உடனடியாக கல்லூரி விடுதியில் முகாம் அமைத்து அனைத்து மாணவர்களையும் பரிசோதனை செய்து மருத்துவ உதவி வழங்கினர். மேலும் எக்ஸெல் கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உணவகம் சுகாதாரமற்ற முறையிலும், பாதுகாப்பற்ற குடிநீர் வழங்கப்படுவதும் கண்டறியப்பட்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வேறு இடத்தில் உணவு தயாரிப்பதற்கும், மேலும் உணவு சமைப்பதற்கும், மாணவர்கள் பருகுவதற்கும் கேன் வாட்டரினை தற்காலிகமாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.மேலும் கல்லூரி உணவகத்தில் குறைபாடுகளை சரிசெய்யும் பொருட்டு உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 32-ன் கீழ் முன்னேற்ற அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் (உரிமம் மற்றும் பதிவு) 2006 மற்றும் ஒழுங்கு முறைகள் 2011-ன் படி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டு தடையாணை பிறப்பிக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரியின் அனைத்து நீர்தேக்க தொட்டிகளையும் உடனடியாக நீரினை வெளியேற்றி மராமத்து பணியினை மேற்கொண்டு கிருமி நீக்கம் செய்ய Super Chlorination செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவத்தில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்வதனை உணவு பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீர்ப்பு அலுவலரிடம் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006, பிரிவு 56, 58-ன் கீழ் சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்தியதற்காகவும், பாதுகாப்பற்ற குடிநீர் வழங்கியதற்காகவும் வழக்கு தொடரப்பட்டு கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.2.00 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு துறை, பொது சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எக்ஸெல் கல்லூரி நிறுவனம் தொடர் கண்காணிப்பில் உள்ளது. அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே கல்லூரி செயல்பட அனுமதி வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் உணவு விடுதிகளை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் பாதுகாப்பான குடிநீரினை வழங்குவதனை உறுதிப்படுத்தவும் உத்திரவிடப்படுகிறது.மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக குறைபாடுகள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், கூகுள் பிளேஸ்டோரிலிருந்து Food Safety Consumer App-யை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News