வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது அதிமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் "கவனமாக" இருக்க வேண்டும்! ரத்தத்தின் ரத்தங்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அட்வைஸ்
மேட்டூர் அணை ஏழு முறை நிரம்பி உள்ளது. ஆனால், இடது கரை, வலது கரைக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது அதிமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் உடன் சென்று தகுதியானவர்களை பட்டியலில் இடம் பெற செய்யவும், போலி வாக்காளர்களை நீக்குவதற்கும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவினருக்கு ஆலோசனை வழங்கினார். நாமக்கல்- திருச்செங்கோடு சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பேசினார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம் நடைபெற உள்ளது வரவேற்கத்தக்கது. நாங்கள் பலமுறை இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்ய எழுதி கொடுத்தும் நீக்கபடாமல் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் உள்ளது. இப்போது தேர்தல் ஆணையமே முழுமையாக அப்பணியை செய்வது வரவேற்கத்தக்கது. எங்களது பூத் முகவர்கள் அரசு அலுவலர்களுடன் சென்று எந்த வாக்காளர்களும் விடுபட்டுவிடக் கூடாது என்பது தொடர்பாக கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மழை பெய்து அனைத்து அணைகளும் முழு அளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை 7 முறை நிரம்பியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் இடது, வலது கரை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் நெற்பயிர்களெல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறது. உடனடியாக அரசு இதனை கவனத்தில் கொண்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் எம்எல்ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ்.மோகன்,கலாவதி,இ.ஆர்.சந்திரசேகர் கேபிஎஸ் சுரேஷ்குமார் ,ராஹா.சு .தமிழ்மணி, அவைத் தலைவர் கந்தசாமி, சேவல் ராஜு, பாலகுருசாமி,ஐடி விங் முரளி பாலுசாமி ,வைரம் தமிழரசி, பொன்னுசாமி , அக்கரைப்பட்டி எம். கண்ணன், வக்கீல் பரணிதரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.