ஒப்பந்தத்தை மீறியதாக புகார்; துணிக்கடை உரிமையாளருக்கு மிரட்டல்!!

நாகையில் ஒப்பந்தத்தை மீறியதாகவும் அதுக்குறித்து கேள்வி எழுப்பினால் மிரட்டல் விடுப்பதாகவும் துணிக்கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-12-18 13:49 GMT

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பகுதியில், ‘பெஸ்ட் பிரைஸ்’ என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வரும் தமிமுன் அன்சாரி, கடந்த நான்கு ஆண்டுகளாக ஃபேமிலி டிரஸ்ட் சார்ந்த இடத்தில், ஒப்பந்த அடிப்படையில் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஃபேமிலி டிரஸ்ட் என்பதால், கடையிலிருந்து வரும் வருமானம், டிரஸ்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு முறையாக பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘கடையை காலி செய்ய வேண்டும்’ என மிரட்டப்பட்டதாகவும், தொடர்ந்து கடை ஷட்டர் சேதப்படுத்தப்பட்டு, வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டதாகவும், அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் தமிமுன் அன்சாரி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் அச்சுறுத்தல் நடந்ததாகவும், இதனால் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடியாகவும், தீவிரமாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News