இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஜிகே வாசன் வலியுறுத்தல்
இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஜிகே வாசன் வலியுறுத்தல்;
சுரண்டை பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள அரசு மருத்துவமனை மற்றும் இரட்டை குளம் கால்வாய் திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கபடி போட்டியை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு தென்காசி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.டி.எஸ்.சார்லஸ் தலைமையில் சுரண்டை பரங்குன்றாபுரம் விலக்கு அருகில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி, அவர்களுடன் கேக் வெட்டி குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்தார். அதை தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இரட்டை குளம் கால்வாய் திட்டம் அமைந்தால் 7500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் எனவே இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சுரண்டை நகராட்சியில் அரசு மருத்துவமனை இல்லை. தமிழக சுகாதாரத்துறை உடனடியாக சுரண்டையில் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் முறையாக நடைபெறாத கல்குவாரிகள் மற்றும் பினாமிகள் பெயரில் நடைபெறும் கல்குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை, கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது தமிழக அரசால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, இந்த கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. அதற்குப் பின்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் மக்கள் ஆட்சிமாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் என்று கூறினார்.அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் என்டிஎஸ் சார்லஸ், தென்காசி மத்திய மாவட்ட தலைவர் அய்யாதுரை, தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கென்னடி, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மாரித்துரை, கோவில்பட்டி ராஜகோபால் மற்றும் ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.