புதுக்கோட்டையில் தேசிய கணித தின விழா
புதுக்கோட்டை கூடல் நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் தேசிய கணித தின விழா தெம்மாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.;
புதுக்கோட்டை கூடல் நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் தேசிய கணித தின விழா தெம்மாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சு.துரைக்குமரன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக இயக்குநர் டாக்டர் எஸ்.விஜிக்குமார் கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கணித கண்டுபிடிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது.. “இந்திய கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாகக் கொண்டாட இந்திய அரசு 2011 இல் அறிவித்தது. உலகக் கணித வரலாற்றில் ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக முக்கியமானவர். கணிதத்திற்கு அவர் அளித்த அரும் பணிகள் அபாரமானவை. எண் கோட்பாடு , முடிவில்லா தொடர்கள், தொடர் கணிதம் மற்றும் பகுத்தெழுத்துகள், பகுப்பியல் செயல்பாடுகள், மாக்-தீட்டா செயல்பாடுகள் போன்றவற்றில் அவர் செய்த ஆய்வுகளை குறிப்பிடலாம். ராமானுஜன் நோட்புக் குறிப்புகள் ஆயிரக்கணக்கான சூத்திரங்கள் ,அடையாளங்கள் நிரூபணம் இன்றி அவரால் எழுதி வைக்கப்பட்டதாகும். இன்னும் இது பற்றிய ஆய்வுகள் உலக அளவில் தொடர்கின்றன. தேசிய கணித தினம் என்பது கணிதத்தை நேசிக்க, சிந்திக்க, புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் பெற உதவும் ஒரு அறிவுப் பெருவிழா ஆகும். கணிதப் பாடம் என்றாலே மாணவர்கள் பலருக்கும் கசக்கும். ஆனால் பயிற்சியும், முயற்சியும், ஆர்வமும் இருந்தால் கணிதமும் இனிக்கும் என்பதை நிரூபித்தவர் கணித மேதை ராமானுஜன். தன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல் ஏற்பட்ட போதிலும் அவரது முழு ஆர்வமும், நோக்கமும் கணிதத்தை சுற்றியே இருந்தது. மேலைநாட்டு கணித அறிஞர்களை வியப்பில் ஆழ்த்திய இப்பெருகமனார் தமிழ்நாட்டில் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகப் புகழ்பெற்ற லண்டன் ராயல் கழக உறுப்பினர் (எஃப்.ஆர்.எஸ்)பதவியையும், டிரினிட்டி கல்லூரி பெல்லோஷிப்பையும் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் கணிதமேதை ராமானுஜன். இவர் 1914 முதல் 1918 வரையிலான ஆண்டுகளுக்கு இடையே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கணித தேற்றங்களை உருவாக்கி சாதனை படைத்தார். 32 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த ராமானுஜன் தனது வாழ்நாளில் 32 மிகச்சிறந்த கணித ஆய்வு கட்டுரைகளை இவ்வுலகிற்கு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவையே ராமானுஜனை சிறந்த கணித மேதையாக மாற்றியது. அதுபோல் மாணவர்களும் கணிதத்தை ஒரு பாரமான பாடமாக எண்ணாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் முயற்சி செய்து, கணிதத்தின் பயன்பாட்டை முழுமையாக உணர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும். சுற்றுச்சூழல், வானியல், அன்றாட மனித வாழ்வியல் போன்றவற்றில் உள்ள கணித கூறுகளை நாம் ஆராய்வதன் மூலம் கணிதத்தின் பண்புகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் த. ஜார்ஜ் கிளமெண்ட் வரவேற்றார். ஆசிரியர் பி. சரஸ்வதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் நமது அறிவியல் மாத இதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் அலுவலக மேலாளர் சி .கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.