குளித்தலையில் கிடப்பில் போடப்பட்ட புதிய கழிப்பிடம்

திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் பொதுமக்களுடன் காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-12-26 13:23 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு , புது கோர்ட் தெருவில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தென்கரை வாய்க்கால் ஓரத்தில் குடியிருக்கும் இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக புதிய கழிப்பிடம் கட்ட கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த ஆண்டு புதிய 12 கழிவறைகள் கொண்ட புதிய கழிப்பிடக்கட்டிடம் கட்டத் தொடங்கி பாதியிலேயே கட்டிடத்தை முழுமையாக கட்டாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐஎம் கட்சியினர் அப்பகுதி மக்களுடன் குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து கண்டன கோஷங்களை எழுப்பி இன்று ஊர்வலமாக சென்று குளித்தலை வட்டாட்சியர் வளாகம் முன்பு அமர்ந்து நகரமன்ற தலைவரை கண்டித்து கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு குளித்தலை இன்ஸ்பெக்டர், வருவாய்த் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறையை அப்பகுதி மக்கள் தினந்தோறும் பயன்படுத்துவார்கள் என எச்சரித்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News