தெரு நாய்களால் பொதுமக்கள், ஆடு, கோழிகள் பாதிப்பு
குமாரபாளையம் மற்றும் கிராமப்புற பகுதியில் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.;
குமாரபாளையம் நகரில் அனைத்து பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும் நாய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தெருக்களில் வாகனத்தில் மற்றும் நடந்து செல்ல கூட அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இதே போல், குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாய்க்கன்பாளையத்தில் பெரும்பாலோர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளை மேய்க்கும் கூலி தொழிலாளர்கள், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு சுற்றி திரியும் நாய்கள் தங்கள் ஆடுகளையும் கோழிகளையும் பிடித்து கொன்று விடுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட கோழிகளையும் தெரு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. சில நாட்கள் முன்பு, வழக்கம் போல் தொழிலாளர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக வந்த தெரு நாய்கள், இரண்டு ஆடுகளையும், இரண்டு கோழிகளையும் கடித்து குதறிவிட்டு சென்றன. அதனை தடுக்கச் சென்ற தொழிலாளர்களையும் நாய்கள் தாக்க முற்படுவதால் அவர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே தெரு நாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.