தோகைமலை காவல் நிலையம் முன்பு டாஸ்மாக் கடையை மூட பொதுமக்கள் போராட்டம்

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை கைது செய்த சம்பவம்;

Update: 2025-12-28 01:18 GMT
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி எஸ்.வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற வாலிபர் அந்த சிறுமியை ஏமாற்றி தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அந்த சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் அந்தப் பகுதிக்கு விடுவதற்காக வந்துள்ளார். அப்போது சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் அந்த வாலிபர் பற்றி விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்றதும் பின்னர் வீட்டிற்கு விட வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை விசாரணை செய்தபோது, கழுகூர் ஊராட்சி மாகாளிபட்டியை சேர்ந்த அழகுவேல் மகன் சரவணன் 23. என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அந்த சிறுமி மீது பாலியல் ரீதியான செயல்பாடுகள் நடந்ததா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை இருப்பதால்தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என ஆத்திரமடைந்த எஸ்.வளையப்பட்டி, ராக்கம்பட்டி, சங்காயிபட்டி பகுதி பொதுமக்கள் தோகைமலை காவல் நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோகைமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு காவல் நிலையம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது

Similar News