கள்ளக்குறிச்சி: காமராஜர் விருது பெற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி...!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின், காமராஜர் விருது பெற்ற பள்ளியாக உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக திகழ்கிறது. உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1974ம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளியாக துவங்கப்பட்டது.;

Update: 2025-12-28 08:20 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின், காமராஜர் விருது பெற்ற பள்ளியாக உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக திகழ்கிறது. உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1974ம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளியாக துவங்கப்பட்டது. பின்னர் 1994ம் ஆண்டு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வியை பள்ளி அளித்து வருவதால் மாணவிகளின் சேர்க்கை ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பள்ளியில் தமிழ் வழி, ஆங்கில வழி என இரு பயிற்று முறை உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு கற்றல் முறையில் மாணவிகளுக்கு பள்ளி பாடங்களை கற்றுத் தருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் முறை மாணவிகள் எளிதாக பாடங்களை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவிகளை ஒழுங்குப்படுத்துவதற்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக பள்ளிக்கு காலை 8.30 மணிக்கு தலைமை ஆசிரியர் வருகை புரிந்து மாணவிகளை நல்வழிப்படுத்துதல், சிறப்பு வகுப்புகளை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பள்ளிக்கு தேவையான வசதிகளை உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் எடுத்து கூறி அதனை பெற்று தரும் நடவடிக்கைகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெரும் பங்காற்றி வருகின்றனர். மாணவிகள் கற்றலோடு உடல் திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உடற்கல்வி பாட வகுப்புகளில் சிலம்பம், கராத்தே, சதுரங்கம், விளையாட்டு, டென்னிஸ், பூப்பந்து, யோகா போன்ற விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் விளையாட்டு போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில், மாநில அளவிலும் என பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளனர். கலைத்திருவிழா போட்டியில் படைப்புத்திறன்களுக்கான போட்டிகளில் கதை கூறல் போட்டியில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி புவனேஸ்வரி மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் மாணவி புவனேஸ்வரி அரசு முறை சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்வதற்கு தேர்வாகியுள்ளார். பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளால் கடந்தாண்டு மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின், காமராஜர் விருது இப்பள்ளிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

Similar News