கறவை மாடுகளுடன் போராட முயன்ற விவசாயிகள் கைது.

பரமத்தி அருகே பால் விலையை உயர்த்தக் கோரி கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த இருந்த விவசாய சங்கத்தினர் முன்னெச்சரிக்கையாக கைது:;

Update: 2025-12-30 13:48 GMT
பரமத்திவேலூர், டிச, 30: தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் தற்போது கொள்முதல் பாலின் விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 வரை உயர்த்தி அறிவிக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு செவிசாய்க்காததால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கரவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கரூர் --சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தை முடியடிக்கும் விதமாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க தலைவர் செளந்தரராஜன் உட்பட 20- க்கும் மேற்பட்ட விவசாயிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பரமத்தியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இது குறித்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறியதாவது:- போராட்டத்தை தி.மு.க அரசு முறியடிக்கும் விதமாக எங்களை கைது செய்துள்ளது. பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி அறிவிக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் 2026 ஆம் ஆண்டு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் அன்று சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கறவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமுதாயக் கூடத்தில் தங்க வைத்திருந்த விவசாய சங்கத்தை சேர்ந்த சுமார் 20 மேற்பட்டவர்களை மாலை சுமார் 6 மணியளவில் விடுவித்தனர்.

Similar News