ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: வி.வி.ராஜன் செல்லப்பா, எம்.ஏ.முனியசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு;
ராமநாதபுரம் நகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், அடிப்படை வசதி குறைபாடுகள் மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , அறிவிப்புக்கு ஏற்ப ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா எம் எல் ஏ தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட செயலாளர் முனியசாமி எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் ஆணிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், டாக்டர் முத்தையா, ஒன்றியச்செயலாளர்கள், ஆர்.ஜி.மருதுபாண்டியன், ஜானகிராமன் நகரச்செயலாளர்கள் என்.ஆர்.பால்பாண்டியன், வின்செண்ட் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகத்தின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி தலைவர்கள் கண்டன உரையாற்றினர். குறிப்பாக, நகரின் பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்,பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் கடும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தினமும் விபத்துகளில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும்,புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையக் கடைகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இன்றி, பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கி வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 'அம்மா உணவகத்தை' மூடிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.வி. ராஜன் செல்லப்பா, "திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் முழுமையாக முடங்கிக்கிடக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் ஆட்சியாளர்கள், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர். நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசின் அலட்சியத்தால் ராமநாதபுரம் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்," எனச் சாடினார். உடனடியாக இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், அதிமுக சார்பில் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.