நாமக்கல் அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்கவாசல் திறப்பு ! -ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி -10 ஆம் தேதி முதல் முறையாகவும் டிசம்பர் -30 இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-12-30 14:53 GMT
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லினால் உருவான சாளக்கிராம மலையில் கிழக்கு பகுதியில் கி.பி 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் மலையைக் குடைந்து, குடவரைக் கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கார்க்கோடகன் என்னும் பாம்பின்மீது அனந்த சயன நிலையில் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர்-30 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் இக்கோவிலில் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதிகாலை 3.50 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை, 4.00 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் 4.15 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,அப்போது கோயில் முன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா...என விண்ணதிர கோஷம் எழுப்பினர். முன்னதாக பட்டாச்சாரியார்கள் ரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி,மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் ,உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோசி, அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா,திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், இராம.ஸ்ரீனிவாசன், டாக்டர் மல்லிகா குழந்தைவேல்,ரமேஷ்பாபு, உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமபத வாசல் வழியாக சென்று ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது,பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடவரை கோவிலின் அடிவாரத்தில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா வழிகாட்டல்படி , உதவி காவல் கண்காணிப்பாளர்கள் தனராசு, கிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் நகர காவல் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அலுவலர்கள் பணியாளர்கள், கட்டளைத்தார்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.2025 ஆம் ஆண்டில் ஜனவரி -10 ஆம் தேதி முதல் முறையாகவும் டிசம்பர் -30 இரண்டாவது முறையாக சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News