முன் விரோதத்தால் பெண்கள் மீது தாக்குதல்
குமாரபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் வசம் வம்பிழுத்த விவசாய குடும்பத்தினர், . பெண்களை தாக்கியதால், இரு பெண்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ..;
குமாரபாளையம் அருகே உள்ள ஆயிகவுண்டன்பாளையம், மகாலட்சுமி நகர் பகுதியில், சுமார் 10 குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். வீட்டுமனைகள் பிரித்து விற்பனை செய்யும் பொழுது அரசு விதிமுறைப்படி பூங்காவிற்காக இடம் ஒதுக்கப்பட்டது. அந்த பூங்கா இடத்தில் குடியிருப்பு வாசிகள் வாழை மற்றும் காய்கறி பயிரிட்டு பயன்படுத்தி வருகின்றனர். அருகில் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளரான முத்துசாமி, அவரது மனைவி ராஜம்மாள் மற்றும் மகன் மோகன் ஆகியோர் குடியிருப்பு வாசிகளிடம் தினசரி ஏதாவது ஒரு சண்டையிட்டு வம்பு இழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து சமாதானம் செய்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குடியிருப்பு வாசிகள் பணிக்குச் சென்ற பிறகு, பெண்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட முத்துசாமி மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் மற்றும் மகன் மோகன் ஆகியோர் அங்கிருந்த தங்கராசு என்பவரது மனைவி சுமதி, குலசேகரன் என்பவரது மனைவி சுகன்யா ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் பயிரிட்டு இருந்த வாழை மற்றும் காய்கறி செடிகளை நாசம் செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு மூன்று பேரும் சேர்ந்து இரண்டு பெண்களையும் அடித்து உதைத்துடன், தாலி கயிற்றை அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கம் அடைந்த பெண்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்பொழுது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து வி.ஏ.ஓ. கோவிந்தசாமி கூறியதாவது: இதே போல் முன்பும் நடந்தது. சமாதானம் செய்து வந்தோம். மீண்டும் இது போல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.