நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பியும், திமுக தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2026-01-05 12:40 GMT
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், சமவேலைக்கு சமஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, 2025, டிசம்பர். 26 முதல், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம், அரசு துறை அலுவலகங்களில், 10 நாட்களாக முற்றுகை போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநில பொறுப்பாளரகள், இடை நிலை ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து வருகின்றனர். பொறுப்பாளர்கள், ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், வாழ்வாதாரக் கோரிக்கை மற்றும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, 20,000 இடை நிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை (ஜனவரி -5) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துவக்கினர்.
நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்தென்றல் இசைவாணன் போராடத்தை முன்னின்று நடத்தினார்,பொருளாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி கோஷம் எழுப்பியும், திமுக தேர்தல் வாக்குறுதி 311 -ஐ நிறைவேற்றக்கோரிய அட்டைகளை ஏந்தியவாறும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத்தலைவர் அமுதா, துணைச்செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News