குளித்தலையில் மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தை உயிரிழப்பு
குளித்தலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி அடுத்த குப்பனம்பட்டி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைரப்பெருமாள் என்கிற அண்ணாதுரை 50. இவரின் மகள் தனலட்சுமி (19) நேற்று வீட்டில் வேலை செய்யாமல் படுத்து தூங்கிக் கொண்டிருத்துள்ளார். அதற்கு அண்ணாதுரை ஏன் வீட்டு வேலை செய்யவில்லை என மகளிடம் கேட்டதற்கு வயிற்று வலி என தனலட்சுமி கூறியுள்ளார். அதற்கு அண்ணாதுரை உனக்கு கல்யாணம் செய்து வைத்தால் தான் நீ சரிப்பட்டு வருவாய் என கூறியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி நேற்று இரவு 8 மணியளவில் வீட்டின் கீழ் புறம் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த அண்ணாதுரை அவரின் மனைவி தங்கம்மாள் மகன் சேவன் ஆகியோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது தனலட்சுமி கிணற்றுக்குள் தண்ணீரில் ஓரமாக கல் சுவற்றை பிடித்து நின்ற வரை காப்பாற்ற அண்ணாதுரை கிணற்றில் குதித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அண்ணாதுரை உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனலட்சுமியை கயிறு மூலம் கட்டி உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர். பிறகு இறந்த நிலையில் அண்ணாதுரை உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அண்ணாதுரை மனைவி தங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்