நாமக்கல்லில் லாரிகள் உதிரிபாக பூங்கா மற்றும் லாரிகள் நிறுத்துவதற்கான பார்கிங் யார்டு அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை !-நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி தகவல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எத்தனை முனைபோட்டிகள் வந்தாலும், திமுக,,கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும்.மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர்த்துவோம்!;

Update: 2026-01-06 16:04 GMT
நாமக்கல்லில் லாரிகள் உதிரிபாக பூங்கா அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த நிறுத்துமிடம் (Parking Yard) அமைக்கவும், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சங்ககிரி ரயில் நிலையத்தை அறிவித்து நவீனப்படுத்தவும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி தரப்படும் என்று நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் / கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் (தெற்கு) மாவட்ட செயலாளர் வி.எஸ் மாதேஸ்வரன் நாமக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
நாமக்கல்லில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது... வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எத்தனை முனைபோட்டிகள் வந்தாலும், திமுக,, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும். மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர்த்துவோம்.மத்திய அரசு சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அதன் செயல்பாடுகளை படிப்படியாக முடக்கி, மகாத்மா காந்தியடிகளின் பெயரை நீக்கிவிட்டு, வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றன.125 நாள்களாக உயர்த்தினாலும், மத்திய அரசு வேலை திட்டத்தை முழுமையாக முடக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. தமிழக மக்களின் உரிமை புரிந்து கொண்டாலும், பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக, இந்த திட்டத்தை ஆதரிப்பது நல்லதல்ல. வரும் தேர்தலில் வாக்குகள் மூலம் வாக்காளர்கள் பாஜகவை விரட்டியடிப்பார்கள். தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளித்தால் பிற மாநிலங்களைப் போல பல்வேறு பிரச்னைகள் வந்துவிடும். கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறுவதற்கு எங்கள் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற தயாராக உள்ளார்கள் என்றார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கோ.சூரியமூர்த்தி, கட்சிமீது அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே என்ற கேள்விக்கு பதில் அளித்த மாதேஸ்வரன் எம்பி.,சமூக வலைத்தளங்களில் உண்மைத் தன்மை கண்டறியாமல் எதை வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடுகிறார்கள். அந்த செய்தி தவறானதாகும். சமீபத்தில் முதல்வர், துணை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து அவர் கட்சிப் பணிகள் குறித்து பேசி உள்ளார்.கற்பனையாக பேசி, எங்கள் கட்சிக்குள் ஏதாவது களங்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறார்கள். இதெல்லாம் வருகின்ற தேர்தலில் தவிடுபொடி ஆகிவிடும். அவர் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம், காவிரியின் குறுக்கே தடுப்பணை, சேலத்தில் இருந்து நாமக்கல்-வள்ளிபுரம் வரை முழுமையாக 6 வழிச்சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், விபத்து பகுதியாக அறிவிக்கப்பட்ட கருங்கல்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் வரும் பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் புள்ளி வெளியிடப்பட உள்ளது. அதேபோல பெருமாள்கோயில் மேடு, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். முழுமையாக 6 வழிச்சாலைகள் வரும்போது, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு விடும்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நாமக்கல் ரயில் நிலையத்தில் போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது. ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து, ஏற்காடு எக்ஸ்பிரஸ், 9:45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு அதிகாலை 4:30 மணிக்கு செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் அறிவித்து, நவீனப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நாமக்கல்லில் லாரிகள் உதிரிபாக பூங்கா அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த நிறுத்துமிடம் (Parking Yard) அமைக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி தரப்படும்.
கரூர் தவெக மாநாடு சம்பவ உயிரிழப்புகள் குறித்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழி போடுவது முறையல்ல. தவெக தலைவர் உரிய நேரத்தில் மாநாட்டிற்கு வந்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். இந்த விவகாரத்தில் பாஜக பல்வேறு விமர்சனங்களை /தேவையில்லாத பிரச்சாரங்களை செய்வது முறையல்ல. சிபிஐ இந்த விசாரணை நடத்தினாலும், மாநில விசாரணை அமைப்புகள் கேட்ட அதே கேள்வியைத்தான் சிபிஐ கேட்கிறது. அனுதாபத்தை கூட பொதுமக்களுக்கு சொல்ல முடியாத விஜய் இன்று சிபிஐ அழைத்து உடன் ஓடுவார். தவெக மக்களோடு மக்களாக இணைந்து களப்பணி ஆற்ற வேண்டும். தவெக அரசியல் வாழ்க்கை பேச்சுக்கும் சினிமாவுக்கும் தான் சரிப்பட்டு வரும். மக்களின் பொது வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்றும் நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வி எஸ் மாதேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சசிகுமார்,கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, மோகனூர் ஒன்றிய செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News