ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஆரணி மற்றும் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தின;

Update: 2026-01-06 18:12 GMT
ஆரணி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து ஆரணி மற்றும் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். ஆரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி எஸ்.அருண்குமார் தலைமையில் சட்ட நகல் கிழித்தெரியும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சி ரமேஷ்பாபு கண்டன உரையாற்றி பேசியது, கிராமபுறத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக திருத்தம் கொண்டு வந்து வேறொரு பெயரில் கிராமப்புற மக்களின் உரிமை ஒழிப்பு திட்டமாக கொண்டு வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டம் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் ஊதியம் ரூ.80 லிருந்து தற்போது ஒரு நாளைக்கு 336 தினக்கூலி கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள், பெண்கள் பயனடைந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைத்து வந்தது. மத்திய அரசு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை ஒதுக்கி வந்த நிதியை படிப்படியாக குறைத்து வந்தது. தற்போது திட்டத்தை சட்ட திருத்தம் செய்து வி.பி.ஜி ராம் என்ற புதிய சட்டத்தை டிசம்பர் 17 அன்று நிறைவேற்றியது. இதனால் சிறிது சிறிதாக இத்திட்டத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு பார்க்கிறது என்று பேசினார். மேலும் இதில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.அப்பாசாமி, ஆ.பெ.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் வி.திவ்யா, கே.வெங்கடேசன், ஏ.ஜெயராமன், எம்.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதேபோல் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.சந்திரசேகர் கண்டன உரையாற்றினார். மேற்குஆரணி ஒன்றிய நிர்வாகிகள் ரஞ்சித், எ.சங்கர், இ.குமரேசன், எஸ்.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News