கோட்டமேட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தமிழ் ஓதுவார் பயிற்றுநர் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

குளித்தலை போலீசார் விசாரணை;

Update: 2026-01-09 07:48 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டைமேட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பிரவீன்குமார் 21. ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சிவனடியாராக உள்ள இவர் தமிழில் ஓதுவார் படிப்பை முடித்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தமிழ் ஓதுவார் பயிற்று பள்ளியில் பயிற்றுநராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லுரி வகுப்பு மதியம் 12.45 மணிக்கு தொடங்கும் என்பதால் தினமும் விடியர் காலையில் அய்யர்மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் பேருந்தில் திண்டுக்கல் சென்று ஓதுவார் பயிற்றுவித்து மீண்டும் கல்லூரிக்கு வருவது வழக்கம். இவர் இன்று வழக்கம் போல் காலை திண்டுக்கல் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு யூனியன் ஆபீஸ் நான்கு ரோடு பாலம் அருகே சென்றபோது எதிரே வை.புதூரை சேர்ந்த ஞானவேல் 43. என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பிரவீன் குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த ஞானவேல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News