குளித்தலை அருகே பணிக்கம்பட்டி கிராமத்தில் நெல் அறுவடை பரிசோதனை
புள்ளி இயல் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் பரிசோதனை;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மருதூர் தெற்கு-1 பணிக்கம்பட்டி கிராமத்தில் புள்ளி இயல் துறையின் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையிலும் நெல் அறுவடை பரிசோதனை நேற்று நடைபெற்றது. புள்ளி இயல் துறை அதிகாரி சிவக்குமார் தலைமையில், துணை வேளாண்மை அலுவலர் கணேசன் முன்னிலையில், பணிக்கம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் விஜயகுமார், இந்து சேகரன் ஆகியோரின் நெல் வயல்களில் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது. இப்பரிசோதனையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பயிரின் மகசூலும் கணிக்கப்பட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சாகுபடி பரப்பினையும், உற்பத்தி அளவையும் கண்காணிக்கவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நேரத்தில் பயிர் இழப்பினை கணித்து பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவும் இம்மாதிரியான பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, 2025 நவம்பர் மாதத்தில் தேர்வு செய்யப்பட்டு, 2026 ஜனவரி மாதம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் குளித்தலை வேளாண்மை அலுவலர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் செல்லப்பன், பயிர் அறுவடை பரிசோதனை வல்லுநர் அகிலன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வராஜ் மற்றும் பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மாவட்ட மேலாளர் கார்த்திக்வேல், வட்டார மேலாளர் கண்ணன் மற்றும் விவசாயிகள் விஜயகுமார், மதியழகன், சந்திரன், செல்வராணி, ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.