எஸ்.ஐ.ஆர்., பதிவுக்கு கூடுதல், ஆவணங்கள் கேட்டு நோட்டீஸ். நகர வளர்ச்சி மன்ற தலைவர் பாலு தலைமையில் பொதுமக்கள் மனு..
எஸ்.ஐ.ஆர்., பதிவுக்கு கூடுதல், ஆவணங்கள் கேட்டு நோட்டீஸ். நகர வளர்ச்சி மன்ற தலைவர் பாலு தலைமையில் பொதுமக்கள் மனு..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வாக்காளர் பட்டியலில் விவரங்கள் பொருந்தவில்லை எனக்கூறி கூடுதல் ஆவணங்கள் கேட்டு பி.எல்.ஓ.,க்கள் வீடுகளுக்கு வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எஸ்.ஐ.ஆர்., என்ற வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்கள் நடந்தது. இதில் குறிப்பிட்ட வாக்காளர் அதே முகவரியில் வசிக்கிறாரா, கடந்த, 2002ஆம் ஆண்டு ஓட்டு போட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அவர் ஓட்டு போடவில்லை என்றால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் ஓட்டு போட்டுள்ளனரா என்ற விபரங்களுடன், வாக்காளரின் போட்டோ மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் பதிவு செய்து சென்றனர். இந்நிலையில், வாக்காளர் வழங்கிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் சரியாக பொருந்தவில்லை என்றால் வேறு புதிய ஆவணங்களை வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களான பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே வழங்கிய ஆவணங்களை தவிர்த்து வேறு புதிய அடையாள அட்டைகளை அவர்கள் கேட்கின்றனர். ராசிபுரம் டவுன், 17 வது வார்டில் சுமார், 1,700 வாக்காளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், 600க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு விவரங்கள் சரியாக பொருந்தவில்லை என தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் ஆவணங்கள் கேட்டு பி.எல்.ஓ.,க்கள் மீண்டும் அப்பகுதிக்கு சென்றனர். ஒரே வார்டில் அதிகப்படியான மக்களிடம் மீண்டும் ஆவணங்கள் கேட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக பி.எல்.ஓ.,க்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து ராசிபுரம் நகர வளர்ச்சி மன்ற தலைவரும் முன்னாள் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளருமான மேட்டு தெரு பாலு அவர்கள் தலைமையில் 20.க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் நகராட்சியில் இதுகுறித்து மனு அளிக்க சென்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதேபோல் பல பகுதிகளில் பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டை சரியாக இருந்தும் அதற்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் நடந்துள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'விவரங்கள் சரியாக பொருந்தாததால் கூடுதல் ஆவணங்கள் அவசியம்' என விளக்கம் அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாகச் சென்று புதிய ஆவணங்களை பெற்றுச் செல்லும் பணி தற்போது தீவிரமாக நடக்கிறது.