குளித்தலையில் மூதாட்டியை நாய் கடித்ததில் மோதிர விரல் துண்டிப்பு
நாய் கடித்து ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளதால் பரபரப்பு;
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்புக்காலனியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி சவுராபானு (வயது 58). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு சந்தை பகுதியில் முட்டைக்கோஸ், காலிபிளவர் கழிவுகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குளித்தலை உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்ற போது 2 தெரு நாய் சண்டையிட்டு வந்து அதில் ஒரு நாய் அவரது கைவிரலை கவ்வியுள்ளது. இதில் அவரின் வலது கையில் மோதிர விரல் துண்டானது. சௌராபானு துண்டான கைவிரலுடன் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக பாரதிநகரை சேர்ந்த ஆனந்தன் மனைவி அபிராமி (வயது 42) என்பவர் நடந்து சென்ற போது அவ்வழியே வந்த தெருநாய் வலது கை மூட்டு பகுதியில் கடித்துவிட்டு அவ்வழியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வாலாந்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி பொன்னுச்சாமி மகன் மதியழகன் (வயது 50) என்பவரின் இடது காலில் கடித்து விட்டு ஓடியுள்ளது. இதே போல மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி சந்தை பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ரெங்கன் மகன் சின்னகாளை (வயது 50). என்பவரது வலது மணிக்கட்டில் தெரு நாய் கடித்து குதறியதில் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுபோல நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்காண்டிமேட்டை சேர்ந்த சுப்பிரமணி மனைவி தனம் (வயது 37). இவரையும் தெரு நாய் கடித்து குதறியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மட்டும் குளித்தலை பகுதியில் 5 பேரை தெரு நாய் கடித்து குதறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குளித்தலை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், வெறி நாய்கள் கடித்து காயம் ஏற்பட்டு தினமும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த வண்ணமாக உள்ளனர். குளித்தலை பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.