செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

பொத்தனூர் பேரூராட்சியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.;

Update: 2026-02-04 14:16 GMT
பரமத்தி வேலூர், பிப்.4:  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே யுள்ள பொத்தனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைப்பதற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் நிறைய உள்ளன. இதன் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அருகாமையில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் வீட்டின் உரிமையாளர்கள் அந்த இடத்தின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் கூறும் போது எங்கள் வீட்டின் அருகாமையிலே செல்போன் டவர் அமைத்தால் செல்போன் டவரில் இருந்து வரும் கதிர் அலைகளால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். செல்போன் டவரில் தீ விபத்து ஏற்பட்டால் எங்கள் வீடுகளில் பாதிப்பு ஏற்படும், ஜெனரேட்டர் மூலம் செல்போன் டவர் இயக்கும் பொழுது அதிலிருந்து பாதிப்பு ஏற்படும், காத்தடி காலத்தில் செல்போன் டவர் சாய்ந்தால் எங்கள் வீடுகள் முற்றிலும் சேதம் அடையும், உயிர்சேதம் ஏற்படவாய்ப்புள்ளது என்றார்.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன், பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் உமாசங்கர், பொத்தனூர் பேரூராட்சி கவுன்சிலர் எம்.டி.வைரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் தற்காலிகமாக இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்ககூடாது என்று தெரிவித்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இச் சம்பவத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News