திருச்செங்கோட்டில் அரசு பள்ளி ஆண்டு விழாவின் ஒத்திகையின் போது விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழப்பு

தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மாணவியின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் தெரிவித்தார்;

Update: 2026-02-09 13:32 GMT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கூலி தொழிலாளியான மாதேஸ்வரன்- தனலட்சுமி தம்பதியின் மகள் ரக்ஷிதா( வயது 9), அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளி கட்டப்பட்டு நூறு ஆண்டுகளானதையொட்டி இன்று மாலை பள்ளி ஆண்டுவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாணவி ரக்ஷிதா பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நெற்றியில் விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் மாணவி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அங்கிருந்து, மாணவியை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மதியம் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்களிடம் திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து பள்ளி ஆண்டு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுஇந்த சம்பவத்தை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலை பார்த்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறித்து மருத்துவரிடம் விளக்கங்களை கேட்டார் தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

Similar News