பாவை கல்லூரியல் நடைபெட்ற இலவச எலும்புத் தாது அடர்த்தி பரிசோதனை முகாம் – ஆரோக்கியமான முதுமைக்கு முன்னேற்றமான படி.
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்கள் மற்றும் இராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து, “வலுவான எலும்புகள் – வலுவான வாழ்க்கை” என்ற தலைப்பில் இலவச எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) பரிசோதனை முகாமை பாவை கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடத்தியது.;
உயிர்முறை பொறியியல் துறை மற்றும் பாவை நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் நடைபெற்ற இம்முகாம், இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் திரு. என்.வி. நடராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் பொறியாளர் இ.என். சுரேந்திரன் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தார்.பாவை பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் எ. விஷ்வா வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தாளாளர் திருமதி மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்புரை ஆற்றிய பொறியாளர் இ.என். சுரேந்திரன் அவர்கள், ரோட்டரி சங்கத்தின் சேவை பணிகள் குறித்து விளக்கினார். 1905ஆம் ஆண்டு அமெரிக்காவில் பால் ஹாரிஸ் தொடங்கிய ரோட்டரி அமைப்பு, இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 15 இலட்சம் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், சமூக நலம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் ரோட்டரி அமைப்பு மனிதநேய சேவைகளை செய்து வருவதாகவும், போலியோ இல்லாத இந்தியா உருவாக ரோட்டரி சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.மேலும், வயதானவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும் எலும்புத் தளர்வு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய எலும்பு அடர்த்தி பரிசோதனை அவசியம் என்பதை வலியுறுத்தினார். இச்சோதனை மூலம் எலும்புகளில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினை மதிப்பீடு செய்து, தக்க சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற முகாம்கள் மக்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவர்களுக்கும் துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது என பாராட்டினார்.நிகழ்வில், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர், சிறப்பு விருந்தினர் மற்றும் தலைவர் இணைந்து முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமின் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே. இராமசாமி, இயக்குநர் (ஆராய்ச்சி) முனைவர் ஆர்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளர் முனைவர் கமலா கிருஷ்ணமூர்த்தி, பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி. ஹரிஹரன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆனந்தகுமார், நடராஜன் உள்ளிட்டோர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக, பாவை பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி பிரித்தி நன்றி நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.