ராசிபுரம் வட்டாட்சியர் மிரட்டியதாக குற்றச்சாட்டு – நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண், ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.;
மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது பழனியம்மாளுக்கு மெட்டாலா கார்குடல் பட்டி பகுதியில் தமிழக அரசால் 1080 சதுர அடி நிலம் கண்டிஷன் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பக் கடன் சுமை காரணமாக, கடந்த 21.01.2013 அன்று அந்த நிலத்தை மெட்டாலாவைச் சேர்ந்த சந்திரன் மனைவி ஜோதி என்பவருக்கு ஒப்பந்த பத்திரம் மூலம் எழுதி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அந்த நிலத்தை மெட்டாலாவைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் நல்லுசாமி பெயருக்கு கிரயம் செய்து கொடுக்குமாறு வற்புறுத்தி, நல்லுசாமி மற்றும் ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார், வருவாய் ஆய்வாளர் வான்மதி, மண்டல துணை வட்டாட்சியர் செல்வி ஆகியோர் பழனியம்மாள் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.அப்போது, “நல்லுசாமி பெயருக்கு கிரயம் செய்து கொடுக்க வேண்டும், இல்லையெனில் குடும்பத்தோடு தூக்கி உள்ளே வைக்கிறேன்” என மிரட்டியதாக பழனியம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மிரட்டலால் பயந்த பழனியம்மாள் மயங்கி கீழே விழுந்ததாகவும், அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டிற்குள் கொண்டு சென்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், தமக்கு மற்றும் குடும்பத்தினருக்கு உயிர் பாதுகாப்பு வழங்கவும் கோரி, பழனியம்மாள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.