ராமநாதபுரம் கஞ்சா கடத்திய 10 பேர் கைது
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள 560 கிலோ கஞ்சாவுடன் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல்: 10 பேர் கைது: ஒருவருக்கு வலை வீச்சு: கடத்தில் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை:;
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்று இரவு சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த சிலரை பிடித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதுடன் பிடித்து வந்தவர்களின் செல்போன்களை ஆராய்ந்தபோது ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அடுத்த முனைக்காடு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அடுத்த தெற்கு வாணி வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையின் போது அந்த வீட்டில் சுமார் 560 கிலோ கஞ்சா பொட்டடங்கள் பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் கேணிக்கரை காவல் நிலையம் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 10 பேரை கைது செய்ததுடன், வீட்டின் உரிமையாளர் பசுபதி பாண்டியன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கஞ்சா கடத்த சம்பவம் தொடர்பாக நான்கு இருசக்கர வாகனங்கள் இரண்டு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1.50 கோடி என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரும் கேணிக்கரை போலீசாரும் இணைந்து சிலரை பிடித்து விசாரித்த போது அவர்கள் கூட்டாக ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருந்ததும் இதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து கஞ்சாவை சரக்கு வாகனங்களில் கஞ்சா பொட்டலங்களை மஞ்சள், மிளகாய், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களோடு சேர்த்து அடியில் மறைத்து வைத்து நூதன முறையில் ராமநாதபுரத்திற்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த கஞ்சாவை ராமநாதபுரம் அருகே தெற்கு வாணி வீதி பகுதியில் ஒரு தோப்பில் மறைத்து வைத்து கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை நோட்டமிட்டு தக்க நேரத்தில் கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனிடையே தகவல் அறிந்த போலீசார் தெற்கு வாணி வீதிக்கு சென்று அங்குள்ள தோப்பு ஒன்றில் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 564 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ், ரஞ்சித் உள்ளிட்ட இருவர் மீது் ஏற்கனவே கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் உத்தரவின்படி கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை 965 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 245 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கஞ்சா போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. அதிகளவு கஞ்சா பறிமுதல் செய்யப்படும்போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் போது 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் அவர்கள் ஓர் ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அந்த வகையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் ஒரு ஆண்டுக்கு குறையாமல் வெளியே வர முடியாது, கைது செய்யப்பட்டவர்களின் மீது தொடர் நடவடிக்கையாக அவர்களின் வங்கி கணக்கு முடக்கம், சொத்து பறிமுதல் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே குற்றவாளிகள் கிடையாது. இவர்களுக்கு மூளையாக மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது அவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து கைது செய்யப்படுவார் என தெரிவித்தார். மேலும் கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.