சேலத்தில் அவசர எண் 100-க்கு போன் செய்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து கார் டிரைவர் தற்கொலை
போலீசார் விசாரணை;
போலீஸ் துறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பேசினார். அப்போது அவர் சேலம் இரட்டை பாலம் அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் புதுடெல்லி-திருவனந்தபுரம் (வண்டி எண்: 12626) ரெயில் முன் பாய்ந்து அடிபட்டு படுகாயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் சூரமங்கலம் ஆண்டிபட்டியை சேர்ந்த கார் டிரைவர் அருண்குமார் (வயது 28) என்பதும், அவசர எண் 100-க்கு போன் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் அவர் தனது தாய் இறந்து பிறகு மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார். மேலும் பல முறை அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்த நிலையில் தற்கொலை செய்யும் நோக்கத்தில் அவர் அவசர எண் 100-க்கு போன் செய்து விட்டு ரெயில் முன் பாய்ந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே அருண்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.