திருச்செங்கோட்டில் களைகட்டிய மார்கழி சங்கீத உற்சவம் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் களைகட்டிய மார்கழி சங்கீத உற்சவம் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு. திருச்செங்கோட்டில், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த 28-ம் ஆண்டு மார்கழி சங்கீத உற்சவம், திருச்செங்கோட்டில் திருவையாறு என்ற சிறப்பு நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக நிறைவு பெற்றது;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் மாணிக் ஜெயக்குமார் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் இசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா கடந்த மார்கழி 1-ம் தேதி டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. திருச்செங்கோடு ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த ஒரு மாதமாக தினசரி நடைபெற்ற இந்நிகழ்வில் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், தவில், வீணை மற்றும் பண்ணிசை என பல்வேறு இசை வடிவங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். விழாவின் சிகர நிகழ்வான நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமித்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து வழங்கிய திருச்செங்கோட்டில் திருவையாறு நிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை கண்முன் நிறுத்துவதாக அமைந்தது. இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இந்த நிகழ்ச்சி இருந்தது தொடர்ந்து, இசைக் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பி.ஆர்.டி (PRD) நிறுவனங்களின் இயக்குநர் பரந்தாமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இசைக் கலைஞர்கள் மயில்சாமி மற்றும் மாணிக் ஜெயக்குமார் ஆகியோர் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.