எடப்பாடியில் 1048 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு சேலம் எம்பி செல்வகணபதி வழங்கினார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையிலும் 1048 தென்னங்கன்றுகள், 248 ஓட்டுநர்களுக்கு காக்கி மற்றும் வெள்ளை சீருடைகள் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி வழங்கி சிறப்பித்தார். தமிழகத்தின் துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்படுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த தின விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக கொட்டும் மழையிலும் 1048 பேருக்கு தென்னங்கன்றுகளும், சேலம் மேற்கு மாவட்ட திமுக ஓட்டுரணி சார்பாக 248 ஆட்டோ, டிராவல்ஸ், பேருந்து, டெம்போ ஓட்டுநர்களுக்கு காக்கி மற்றும் வெள்ளை சீருடைகளும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி வழங்கி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மண்டபம் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது சேலம் மேற்கு மாவட்டத்தில் துணைத் முதல்வர் பிறந்த நாளான அன்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சேலம் மேற்கு மாவட்டத்தில் மட்டும் முப்பதாயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெருமையுடன் கூறினார். இந்நிகழ்ச்சியில் எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா, மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் யூனஸ், மேற்கு மாவட்ட திமுக ஓட்டுரணி அமைப்பாளர் ராஜா என்கின்ற சண்முகம், திமுக மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பூவாகவுண்டர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நகர ஓட்டுநர் அணி மற்றும் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.