திருச்செங்கோட்டில் 14-வதுஆண்டாக அறுபத்து மூவர் பெருவிழா மற்றும் திருவீதி உலாஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டிற்கு திருஞான சம்பந்தர் வருகை தந்ததை நினைவு கூறும் வகையில், 14-வதுஆண்டாக அறுபத்து மூவர் பெருவிழா மற்றும் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்;

Update: 2026-01-11 19:06 GMT
​நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, கடந்த 7-ம் நூற்றாண்டில் சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் வருகை தந்தார். அப்போது இப்பகுதியில் நிலவிய 'குளிர் சுரம்' என்னும் கொடிய நோய் நீங்க வேண்டி, அவர் பதிகம் பாடி அந்நோயை நீக்கியதாக வரலாறு கூறுகிறது. ​இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில், 'அருள்நெறி திருப்பணி மன்றம்' சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக அறுபத்து மூவர் பெருவிழா நடத்தப்பட்டு வருகிMது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 14-வது ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், அம்மையப்பர், சுகந்த குந்தலாம்பிகை அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ​இவர்களுடன் ஒன்பது தொகையடியார்கள், சந்தான குரவர்கள் நால்வர் உள்ளிட்ட 63 நாயன்மார்களின் திருவுருவங்கள், மலர்களால் அலங்கரிக்கப் பட்ட 20 பல்லக்குகளில் ஏற்றப்பட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் பல்லக்குகளைத் தோளில் சுமந்து வர, நான்கு ரத வீதிகள் வழியாக பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. சமயக்குரவர்கள் வேடமிட்ட சிறுவர்கள் ஊர்வலத்தில் வந்தனர். வீதி உலாவின் போது வழி நெடுகிலும் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய சிறிய பதாகைகள் வைக்கப் பட்டிருந்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த திருவீதி உலா, இறுதியில் கைலாசநாதர் கோவிலை அடைந்து நிறைவடைந்தது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News