கோயில் நிலங்களில் ரூ.198.65 கோடி மதிப்பு கனிமவளங்கள் திருட்டு: சேலம் சரக டிஐஜி ஆஜராக உத்தரவு
கோயில் நிலங்களில் ரூ.198.65 கோடி மதிப்பு கனிமவளங்கள் திருட்டு: சேலம் சரக டிஐஜி ஆஜராக உத்தரவு
கோயில் நிலங்களில் ரூ.198.65 கோடி மதிப்பு கனிமவளங்கள் திருட்டு: சேலம் சரக டிஐஜி ஆஜராக உத்தரவு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ரூ.198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான கனிமவளங்கள் திருடப்பட்டுள்ளதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடா்பாக சேலம் சரக டிஐஜி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சேலத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் கனிமவளங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயா்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டாா். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சாா்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் அருண் நடராஜன், கூடுதல் அரசு வழக்குரைஞா்கள் பரணிதரன், ஸ்டாலின் அபிமன்யு ஆகியோா் ஆஜராகினா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையா் எம். ஜோதிலட்சுமி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையை பாா்வையிட்ட பின்னா் நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அறநிலையத் துறை உதவி ஆணையா் தாக்கல் செய்த அறிக்கை அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை, நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கற்களும், கிருஷ்ணகிரி மாவட்டம், பேளாராள்ளி பட்டாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ரூ. 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கற்களும் திருடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்குள் அறநிலையத் துறை அதிகாரிகள் செல்ல முடியாமல் சமூக விரோதிகள் தடுத்து வருகின்றனா் என்றும் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் கனிமவளங்கள் திருடப்பட்டுள்ள விவகாரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த திருட்டுகளில் காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் தொடா்புள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேசத்துக்கு சொந்தமான சொத்துகளை திருடுபவா்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் முன்வந்துள்ளது. எனவே, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கோயில்களின் சொத்துகளில் உள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் சரக காவல் துறை டிஐஜி-க்கு உத்தரவிடப்படுகிறது. அவா் இந்த கனிமவள திருட்டு தொடா்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆகியவை குறித்த அறிக்கையை வருகிற 26 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும்’” என்று உத்தரவிட்டாா்.