நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் விரைவில் 2 ஏ.டி.எம்கள் - சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மு. ஆசியா மரியம் தகவல்.
நாமக்கல் மாநகராட்சி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 2 புதிய ஏ.டி.எம் இயந்திரங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் , சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், தகவல்.
நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 22.10.2024 அன்று நாமக்கல் மாநகராட்சி, முதலைபட்டியில் ரூ19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 10.11.2024 முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தங்கள், கடைகள், உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு பகுதி, தாய்மார்கள் பாலுட்டும் அறை, ஓட்டுநர்கள் ஓய்வு அறை, நேரம் காப்பாளர் அறை, பொருள் வைப்பு அறை, துப்புரவு பிரிவு அலுவலகம், மின்வாரிய அறை, காவலர் அறை, பொது சேவை பிரிவு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் கடைகளில் உணவு பொருட்களை தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்குமாறும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துணிப்பைகளை மட்டும் பயன்படுத்த வேண்டுமெனவும் வியாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சிரமமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகள் இயக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பேருந்து நிலையத்தில் 2 புதிய ஏ.டி.எம் இயந்திரங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ப.செங்கோட்டுவேலன், வட்டார போக்குவரத்து அலுவலர் நாமக்கல் (வடக்கு) இ.எஸ்.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.