தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயார் : பீம்ராவ் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் பேட்டி

தமிழ்நாட்டில் மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமையில் கட்சி வலுப்பெறும் என்றும், தமிழ்நாடு மீண்டும் இந்திய குடியரசுக் கட்சியின் கோட்டையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.;

Update: 2025-12-22 11:40 GMT
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயார் : பீம்ராவ் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் பேட்டி ராணிப்பேட்டடை, டிச.23- டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் பேரனும், இந்திய குடியரசுக் கட்சி (Republican Party of India), இந்திய பௌத்த சங்கம் (Buddhist Society of India), சமதா சைனிக் தள் (Samata Sainik Dal) ஆகிய அமைப்புகளின் தேசியத் தலைவருமான பீம்ராவ் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் தமிழ்நாட்டில் இந்திய குடியரசுக் கட்சியை வலிமையான அரசியல் சக்தியாக உருவாக்குவதே தனது நோக்கம் என தெரிவித்தார். ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையில் நடைபெற்ற இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்ட அளவிலான மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் தனது வாழ்நாளில் தொடங்கிய இந்திய குடியரசுக் கட்சி, இந்திய பௌத்த சங்கம் மற்றும் சமதா சைனிக் தள் ஆகிய மூன்று அமைப்புகளின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தனது கடமை என தெரிவித்தார். சமீபத்தில் சென்னையிலிருந்து தமிழ்நாட்டில் இந்திய குடியரசுக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தென்னிந்திய மாநிலங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் கட்சிக்கு வலுவான அலகுகள் உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் பல அம்பேத்கர் பெயர் கொண்ட சிறிய அரசியல் அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து சிறிய கட்சிகளும் அசல் அம்பேத்கரிய கட்சியான இந்திய குடியரசுக் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்திய குடியரசுக் கட்சி, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாற்றாக உருவாகும் என தெரிவித்த அவர், குறிப்பாக SC, ST, OBC சமூக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதே கட்சியின் முக்கிய இலக்கு என்றார். அரசியல் கட்சி இல்லாமல் பாபாசாஹேப் அம்பேத்கரின் இலக்குகளை நிறைவேற்ற முடியாது என்றும், கடந்த பல ஆண்டுகளாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே அளித்து, சமூக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி சந்திக்கவுள்ளது என்றும், மதச்சார்பற்ற, அரசியலமைப்புவாத கட்சிகளுடன் கூட்டணி பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜக மற்றும் அடிப்படைவாத அமைப்புகளுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி அமைக்க மாட்டோம் என உறுதியாகக் கூறினார். இந்திய அரசியலமைப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவதாகக் கவலை தெரிவித்த அவர், அரசியலமைப்பைப் பாதுகாப்பதே கட்சியின் முதல் இலக்கு என்றார். நீதித்துறை, தேர்தல் ஆணையம், கணக்காயர் போன்ற அரசியலமைப்பு தூண்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், EVM முறைக்கு எதிராக மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசிடம் 13 அம்ச கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதில் தாழ்த்தப்பட்டோர் மீதான அட்டூழியங்கள் கல்வி தனியார்மயமாக்கல் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன என்றார். தமிழ்நாட்டில் மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமையில் கட்சி வலுப்பெறும் என்றும், தமிழ்நாடு மீண்டும் இந்திய குடியரசுக் கட்சியின் கோட்டையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். இறுதியாக, இந்த இயக்கம் தனிப்பட்ட தலைமைக்காக அல்ல, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் என்றும், யார் வேண்டுமானாலும் கட்சியில் இணைந்து பொறுப்பேற்கலாம் என்றும் அவர் கூறினார்.

Similar News