பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து நாளை நடைபெறவிருந்த (அக்டோபர் -22) போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! -தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் நாமக்கல் ஆர்.வேலுசாமி அறிவிப்பு.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளார்.;
பால் கொள்முதல் விலையை உயா்த்தாத தமிழக அரசைக் கண்டித்து அக்டோபர் 22-ஆம் தேதி (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் ஆவின் மற்றும் தனியாருக்கு பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டம் நடைபெறும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் நாமக்கல் ஆர்.வேலுசாமி அறிவித்து இருந்தார், தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து ரூ.15/- உயர்த்தி வழங்காததை கண்டித்து (அக்டோபர் 22) புதன்கிழமை காலை முதல் ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் சப்ளையை நிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க அமைப்புகளும், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைமையில் ஒருங்கிணைந்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் புதிய காற்றுழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் பேரிலும், கனமழையின் காரணமாகவும் அக்டோபர் 22 புதன்கிழமை காலை தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த போராட்டம் தற்சமயம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.