நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்- 4 தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசியதாவது:- குரூப்-4 தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 999 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு எழுத 217 மையங்களில் 287 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி, மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 740 அறை கண்காணிப்பாளர்கள், 287 முதன்மை கண்காணிப்பாளர்கள், 71 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 25 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக போதுமான அளவு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மையங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், உதவி கலெக்டர்கள் அபிநயா, லோகநாயகி, சுகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.