நாமக்கல்லில் தெருவில் விளையாடி கொண்டு இருந்த 4 வயது சிறுவன் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு சின்னமுதலைப்பட்டி கடக்கால்வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக நேற்று சுமார் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. இதில் நீருற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. ஆனால் இன்று புத்தாண்டு என்பதால் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.;
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் - ரதிபிரியா ஆகிய தம்பதியினரின் மகன் ரோகித் (வயது 4) இன்று மாலை தெருவில் விளையாடி கொண்டு இருந்து உள்ளான். தாத்தா வீரன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். இருப்பினும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பாதாள சாக்கடை குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் தேடி உள்ளனர். அப்போது அங்கு சிறுவன் ரோகித் சடலமாக மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் சிறுவன் ரோகித்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் சிறுவனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் சிறுவன் விழுந்து பலியான சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.