குளித்தலையில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற முகமூடி மர்ம நபர்
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குளித்தலை போலீசார் விசாரணை;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி ஏரம்மாள் (வயது 73 ). இவர் கணவருடன் நேற்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இரவு வீடு புகுந்த 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் தனியாக பதுங்கி இருந்துள்ளார். கட்டிலில் படுத்திருந்த ஏரம்மாளை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்று அவரை தாக்கி கழுத்தை நெறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை வலுக்கட்டாயமாக பறித்து சென்றுள்ளார். காயமடைந்த ஏரம்மாள் மயக்கத்துடன் கிடந்துள்ளார். மயக்கம் தெளிந்த அவர் அழுது கூச்சலிடவே கணவர் மற்றும் அருகில் குடியிருக்கும் நபர்கள் ஓடி வந்து பார்த்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் இரவு 11:30 மணியளவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அருகிலுள்ள குடியிருப்புகளில் விசாரணை செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சோதனை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து மூதாட்டியை கழுத்தை நெறித்து தாழி செயின் பறித்து சென்ற முகமூடி அணிந்த மர்ம நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.