வேலூரில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வேலூர் மாவட்டத்தில் சாராய வியாபாரிகள் உட்பட ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் சம்பத்நகரை சேர்ந்தவர் ராமு (வயது 33). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அணைக்கட்டு தாலுகா செதுவாலையை சேர்ந்த பிரகாசம் (27), வல்லண்டராமம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (32) ஆகியோரை மணல் கடத்தல் வழக்கில் கே.வி.குப்பம் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று சாராயம் விற்ற வழக்கில் அணைக்கட்டு தாலுகா அல்லேரியை சேர்ந்த திருப்பதியை (19) வேலூர் தாலுகா போலீசாரும், அணைக்கட்டு முத்துக்குமாரமலையை சேர்ந்த ஜெயபாலை (34) வேப்பங்குப்பம் போலீசாரும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். ராமு, பிரகாசம் உள்பட 5 பேரும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் ஜெயில் அலுவலர்களிடம் வழங்கினர்.