தென்காசியில் ரயில் மோதியதில் 50 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ரயில் மோதி 50 ஆடுகள் பலி சோகம்;
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் நேற்று அதிகாலை தென்காசி மற்றும் கிழப்புலியூர் ரயில் நிலையங்களை தாண்டி பாவூர்சத்திரம் நோக்கி சென்றது. அந்த ரயில் சிறிது தூரம் சென்ற நிலையில் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கேடிசி நகருக்கு பின்புறம் மேய்ச்சலுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 50 செம்மறிஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 20 சினை ஆடுகள் உள்பட 50 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸ் எஸ்ஐக்கள் மாரியப்பன், மாடக்கண்ணு மற்றும் போலீசாரும், பாவூர்சத்திரம் காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் அவை என்பது தெரியவந்தது. அவர் பாவூர்சத்திரம் கேடிசி நகரில் உள்ள ஒரு காலியிடத்தில் ஆட்டுக்கிடை போட்டு பராமரித்து வந்துள்ளார். தினமும் காலை 6 மணிக்கு மேல் நன்றாக விடிந்த பின்னர், செம்மறி ஆடுகளை முத்துராஜ் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இன்று அந்த ஆடுகளே தன்னிச்சையாக ஆட்டுக் கிடையை விட்டு வெளியேறி மேய்ச்சலுக்கு சென்றதால், ரயில் மோதி உயிரிழந்தது, தெரியவந்துள்ளது. ரயில் மோதி பலியான 50 ஆடுகளின் மதிப்பு சுமார் 8 லட்சம் இருக்கும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.