நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை - அதிகபட்சமாக தலைஞாயிறில் 6.5 செ.மீ. மழை பதிவு

புகையான் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் மேலும் சேதம்;

Update: 2025-10-07 07:26 GMT
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து மந்தமான வானிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல், நாகை, வேளாங்கண்ணி, தெற்குப் பொய்கை நல்லூர், வடக்குப் பொய்கை நல்லூர், கல்லார், அக்கரைப்பேட்டை, பாப்பாகோயில், செல்லூர், ஐவநல்லூர், ஆழியூர், சிக்கல், கீழ்வேளூர், தேவூர், திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் மழை பெய்தது. தலைஞாயிறு பகுதியில் 6.5 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. வேதாரண்யத்தில் 5.5 செ.மீ., கோடியக்கரையில் 4.6 செ.மீ., திருக்குவளையில் 2.3 செ.மீ., நாகை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி பகுதிகளில் தலா 1 செ.மீ. அளவிற்கு குறைவான மழை பதிவாகியுள்ளது. கனமழையால், குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. ஏற்கெனவே புகையான் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் தற்போது மேலும் சேதமடைந்துள்ளதால், அறுவடைப் பணிகள் தாமதமாவதோடு மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Similar News