சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் 7¼ பவுன் நகை திருட்டு

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-07-13 09:21 GMT
சேலம் கோரிமேடு ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் நியமிதுல்லா (வயது 29). இவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார். இதற்காக அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். அப்போது நியமிதுல்லா தான் வைத்திருந்த பையை பஸ்சில் பைகள் வைக்கும் இடத்தில் வைத்தார். இதையடுத்து அவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏறினார். அப்போது அவர் அங்கு தன்னுடைய பையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பையில் அவர் 7¼ பவுன் நகை வைத்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் நகையுடன் பையை திருடி சென்றது தெரியவந்தது. நகை திருட்டு குறித்து நியமிதுல்லா பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News