பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் 750 சிறப்பு பஸ்கள்

நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தகவல்

Update: 2025-01-10 03:34 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் திருவிழா காலங்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரையிலும், அதேபோல், மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப வசதியாக 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் பல்வேறு வழித்தடங்களில் 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சீபுரம், பெங்களூரு மற்றும் டைடல் பார்க் பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோட்டிற்கும், ஓசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருப்பூருக்கும், நாமக்கல், தர்மபுரி, ஆத்தூர், செந்தாரப்பட்டி, ராசிபுரம், மேட்டூர், திருச்செங்கோடு மற்றும் தம்மம்பட்டியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஈரோடு மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவையில் இருந்து ஓசூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

Similar News