திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் 98வது ஆராதனை விழா.
திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் 98வது ஆராதனை விழாவையொட்டி நடைபெற்ற மகேஸ்வரபூஜையில் சாதுக்களுக்கு ஆடைதானம் மற்றும் அன்னதானம் வழங்கினார் ஆசிரம தலைவர் சந்திரமோகன். உடன் செயலாளர் ஏ.பாலமுருகன், பொருளாளர் எஸ்.ஆர்.வி.பாலாஜி ஆகியோர் உள்ளனர்;
ஆரணி, திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் 98வது ஆராதனை விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் வாழ்ந்த ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு பல்வேறு மகிமைகள் உள்ளது. இதனால் சேஷாத்திரி சுவாமிகளை 'தங்க கை சேஷாத்திரி சாமி' என்று அழைத்தனர். இப்படி பல மகிமைகளை செய்து காட்டிய மகான் சேஷாத்திரி சுவாமிகள் 1929ம் ஆண்டு முக்தி அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை, செங்கம் சாலையில் அவரது சமாதி இருக்கும் இடத்தில் ஆசிரமம் அமைக்கப்பட்டு பல சேவைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் 98வது ஆராதனை விழா நடைபெற்றது. ஆசிரம தலைவர் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஆசிரம செயலாளர் ஏ.பாலமுருகன், பொருளாளர் எஸ்.ஆர்.வி.பாலாஜி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் இன்னிசை நிகழ்ச்சிகளும், சேஷகானமும் நடைபெற்றது. 2வது நாள் விழா சனிக்கிழமை கோபூஜை, யாகத்துடன் தொடங்கியது. ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகாஆரத்தி நடந்தது. பிறகு மகேஸ்வர பூஜை தொடங்கியது. சாதுகளுக்கு ஆடைதானமும், பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது. மேளதாளம், வாணவேடிக்கை முழுங்க மாடவீதியை சுற்றி நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.