100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல்லில் வெகு விமரிசையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தெப்பத்திருவிழாவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.;
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவிலில்,100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, கமலாலய குளத்தில் தெப்பத்திருவுலா நடைபெற்றது.அமைச்சர் மா.மதிவேந்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர்நாமக்கல் மாநகரில், மூர்த்தி,தீர்த்தம், தலம் என்ற 3 வகை சிறப்புகளோடு, புராதன சிறப்பு மிக்க மலைக் கோட்டையை ஒட்டி, குடைவறைக் கோவிலாக,அருள்மிகு நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி, அருள்மிகு அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர்,அருள்மிகு ஆஞ்சநேயர் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி, அருள்மிகு நாமகிரி தாயாரை முதலில் கண்ட இடமாக இந்தக் கமலாலய குளம் திகழ்வதாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மலைக் கோட்டையை ஒட்டி அமைந்துள்ள கமலாலய குளத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடத்தப்படாமல் இருந்ததால் தற்போது, தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை, தமிழக முதல்வரிடம் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோர் கொண்டு சென்று, அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் உத்தரவின்படி, நாமக்கல் அருள்மிகு அரசியல் சுவாமி திருக்கோவில் தெப்பத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு, திருவிழா பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.அதன்படி, தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் இந்த திருக்கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தெப்பத்திருவிழா மார்ச் 12ஆம் தேதி புதன்கிழமை மாலை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்,பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மலைக்கோட்டை அருகே அமைந்துள்ள கமலாலயகுளம் தூய்மை செய்யப்பட்டு பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, நரசிம்மர் அரங்கநாதர் ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் உற்சவ மூர்த்திகள், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் இருந்து, மங்கள வாத்தியம் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குளம் அருகே உள்ள நாமகிரியம்மன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து,கமலாலய குளத்தில் அமைக்கப்பட்ட, பல்வேறு நறுமண மலர்கள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு உற்சவமூர்த்திகள் எழுந்தருளினார்கள். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து, அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உமா,பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜேஸ்குமார், மாதேஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் தெப்ப திருவுலாவை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கமலாலய குளத்தின் மையப்பகுதியில் உள்ள உள்ள நீராளி மண்டபத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. ஶ்ரீ வைகாணச முறைப்படி தெப்பத் திருவுலா வெகு சிறப்பாக நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் கமலாலய குளத்தில் நடைபெற்ற தெப்பத் திருவுலாவைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் குளத்தின் கரைகளில் திரண்டு வந்து பார்வையிட்டு சுவாமி வழிபாடு செய்தனர்.நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. இராஜேஷ் கண்ணன் தலைமையில், துணைக் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் கமலாலய குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஜொலித்தது.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கலாநிதி,துணை மேயர் பூபதி, ஆணையாளர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் இளையராஜா, தெப்பத்திருவிழா கட்டளைத்தாரர்கள், அறங்காவலர் குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் கமலாலயக் குலத்தில் நடைபெற்ற தெப்பத்தேர் விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரசினம் செய்தனர்.