ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் குமாரபாளையம் வட்டத்தை சேர்ந்த 203 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா உட்பட ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை ஈ.காட்டூர் ஆர்.என். மஹாலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், பாதரை மற்றும் வீரப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 203 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் ஆணை, புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது,மிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றார்கள். அந்த வகையில், குமாரபாளையம் வட்டத்தைச் சேர்ந்த இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றி அவர்களது கனவை நனவாக்கும் வகையில் இன்றைய தினம் 147 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11 நபர்களுக்கு பட்டா மாறுதல் மற்றும் 45 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாக்கள் வழங்குதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டா வழங்குவது மட்டுமல்லாமல், அடுக்குடிமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய, நடுத்த மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் மாதத்திற்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரை சேமிக்க கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/-வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதியாக எண்ணி இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு நேரில் ரேசன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பணிகளை மேற்கொண்ட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களும், மேலும் நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித் குமார் ஜெயின், குமாரபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.