1500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய அமைச்சர் மா மதிவேந்தன்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 850 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.79.68 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகள் மற்றும் 1500 மகளிர் சுய உதவிக்குழு.;
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 850 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.79.68 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகள் மற்றும் 1500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனி கவனம் செலுத்தப்பட்டு மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் மகளிர் உதவிக்குழுக்களுக்கு இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3500 கோடி கடன் இணைப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. ஊரகம் மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2021 - 2022 ஆம் ஆண்டு 9,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.499.20 கோடியும், 2022-2023 ஆம் ஆண்டு 10,751 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.658.62 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டு 10.082 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.674.69 கோடியும், 2024-2025 ஆம் ஆண்டு 14516 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.886.00 கோடியும் மற்றும் 2025-2026 ஆம் ஆண்டு 4414 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.337.99 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 775 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.96 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. 159 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இன்று வழங்கப்படும் மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் 25 கிலோ வரை சுய உதவிக்குழு பொருட்களை நகர மற்றும் மோஃபுசில் (MOFUSSIL BUS) பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோ-ஆப்டெக்ஸ் துறையில் பொருட்கள் வாங்கும் பொழுது ஏற்கனவே உள்ள தள்ளுபடிகளுக்கு மேல், 5% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு (CMCHIS) இந்த அடையாள அட்டை முதன்மை சான்றாக கருதப்படும். அடையாள அட்டைகளைக் கொண்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தித் துறையால் வழங்கப்படும் பல்வேறு கடன்களைப் பெற முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆவின் தயாரிப்புகளில் சலுகை விகிதமும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலும் 10% தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் நலனில் அக்கறை கொண்டு விடியல் பயண திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் மாதந்தோறும் சுமார் ரூ.3,000 வரையில் சேமிக்கக் கூடிய வகையில் இத்திட்டங்கள் அமைந்துள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நுட்பமாக சிந்தித்து தான் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இவ்விழாவில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 9,129 சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புறங்களில் 3998 சுய உதவிக்குழுக்களும் என 13,127 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 1,58,604 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2021-22 முதல் 2025-26 வரை 48,844 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,056.50 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு அவர்களின் சேமிப்பின் அடிப்படையில் ரூ.1.50 இலட்சம் முதல் ரூ.25.00 இலட்சம் வரை வாழ்வாதார மேம்பாட்டிற்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வழங்கப்படும் வங்கி கடனுதவியை பயன்படுத்தி மகளிர் தொழில் முனைவோராக செயல்பட்டு வாழ்வாதார மேம்பாடு அடைவதுடன், குடும்பத்தின் வருமானமும் நாட்டின் வருமானமும் உயரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை கண்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பொருட்களை பதிவேற்றம் செய்து விற்பனை மேற்கொள்ள மகளிர் திட்டம் உறுதுணையாக உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் வட்டார / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசானது பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 வழங்கும் அன்புக் கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 140 குழந்தைகளுக்கு ரூ.2.80 இலட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விழாவில் பயன்பெற்றுள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் 159 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். மேலும், வங்கி கடன் இணைப்பாக ஊரக பகுதிகளில் 512 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (5,613 பயனாளிகள்) ரூ.52.76 கோடியும், நகர்ப்புர பகுதிகளில் 263 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (3,131 பயனாளிகள்) ரூ.24.20 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 117 பயனாளிகளுக்கு நுண் தொழில் சிறுகடனாக ரூ.73.00 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 225 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடியும், பெண் தொழில் முனைவோர் 52 பயனாளிகள் ரூ.74.00 இலட்சமும், வட்டார வணிக வளமையம் 25 பயனாளிகளுக்கு ரூ.13.00 இலட்சம் என மொத்தம் 850 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (9,163 பயனாளிகள்) ரூ.79.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் துணை மேயர் செ.பூபதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் மா.சந்தானம், உதவித்திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) ப.பபிதா உட்பட வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.