ரயிலில் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் வழியாக ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Update: 2024-05-18 12:34 GMT
வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்துவதாக வேலூர் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்தது.அப்போது ரயிலின் முன்பக்க பொது பெட்டியில் குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த பெட்டியில் இருந்து டிராலி பைகளுடன் இறங்கிய 2 பேரின் பைகளை போலீசார் சோதனை செய்த போது அதில் 8 பண்டல்களில் சுமார் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37), ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டம் மகாசிங்கி பகுதியை சேர்ந்த அர்ஜுன்மாலிக் (24) என்பதும், மணிகண்டன் காஞ்சீபுரத்துக்கும், அர்ஜுன்மாலிக் கேரள மாநிலத்திற்கும் கஞ்சா கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரையும் அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.